Sunday, August 16, 2009

1.அகர முதலாம் ஆதியே போற்றி

அகர முதல எழுத்தெல்லாம்,
ஆதி பகவன் முதற்றே உலகு - - சீர்காழி கோவிந்தராஜன்

Saturday, January 24, 2009

குற‌ள் க‌தை (2)

அன்பும் அறனும் இல்வாழ்வின் பண்பும் பயனுமாம் போற்றி!


அந்தக்கிராமம் முழுக்க அன்பால் பின்னப்பட்டிருந்தது. பண்பால் பிணைக்கப்பட்டிருந்தது. அந்த ஊர் முன்னேற்றத்துக்கு நூறு விழுக்காடு காரணம் அமுதா அறிவழகன் தம்பதியினர்தான் காரணம். இருவரும் படித்த பண்பு மிக்கவர்கள். தாம் வாழும் கிராமம் ஒரு முன் மாதிரிக் கிராமமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டு செயலாற்றும் செயல் மறவர்கள். அறிவழகன் மனிதப்பணியில் புனிதப்பணியாம் ஆசிரியப்பணியைச் செய்பவர். அலுவல் நேரம் போக மீந்த நேரங்களில் தன் பொன் பொழுதுகளை தான் சார்ந்துள்ள கிராம மக்களின் முன்னேற்றத்துக்காக உழைக்கும் ஓர் தன்னார்வலர்!


தன் கணவனின் குறிப்பறிந்து அதற்கேற்றவாறு செயற்படும் அமுதா! அறிவழகன் “எள்” என்றால் எண்ணையாக நிற்கும் படு சுறுசுறுப்பு! அறிந்தவர், அறியாதவர் எவர் வந்தாலும் இன்முகத்தோடு உபசரித்து விருந்தோம்பும் இயல்பு!

பகற் பொழுதில் அரசுப்பள்ளியில் ஆசிரியப்பணி! வாழ்க்கையை நகர்த்த அறிவழகன் குடும்பத்துக்கு பொருளாதார ரீதியாக நிறைவளிக்கும் பணி. இரவு நேரத்தில் சமுதாய உயர்வுக்காக படிப்பறிவற்ற மக்களுக்காக எழுத்தறிவிக்கும் ஈடில்லாப் பணி! இது அறிவு - அமுதா தம்பதியினர்க்கான மனநிறைவுப்பணி!


ஓரிரு ஆண்டுகளே ஓய்வு பெறும் நிலையில் உள்ள அறிவழகன் தம்பதியினருக்கு நவீன் என்ற மகனும், அகிலா என்ற மகளுமாக இரு பாசமலர்கள். நவீன் இறுதியாண்டு மருத்துவம் பயில்கிறார். அகிலா பொறியியலில் முதலாமாண்டு பயில்கிறார்.

விடுமுறை என்றால் இருவரும் கிராமத்துக்கு வந்து அப்பாவுக்கும் அம்மாவுக்கும் உறுதுணையாக இருந்து உதவுவர். மருத்துவம் முடித்து அந்தக் கிராமத்துக்கும் சுத்துப்பட்டி கிராமங்களுக்கும் மருத்துவ சேவை வழங்குவதில் நவீன் உறுதியாக இருந்தது அறிவழகனுக்கு பெரு மகிழ்வைத் தந்தது. அதேபோல அகிலா பொறியியல் முடித்ததும் அந்தக் கிராமத்திற்குள் உலகைக் கொண்டுவரும் இணைய வழிக் கல்வி, வேளாண் பெருமக்களுக்குரிய நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் என்று தம் பங்குக்குச் செய்யவிருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்ததில் அந்தக் கிராமமே அவர்களை தங்கள் பிள்ளைகளாக கருதி பாசத்தைப் பொழிந்தனர். நூலைப்போல சேலை; தாயைப்போல பிள்ளை என்ற பழமொழி இவர்கள் போலிருந்ததால் ஏற்பட்டதுதானோ!


ஊர் சாவடியின் ஒரு பகுதியில் முதியோர் வகுப்பை அறிவழகன் நடத்துவார். மழைக்குக் கூட பள்ளியில் ஒதுங்காதவர்கள் அறிவழகனின் இரவுப்பள்ளியில் ஒதுங்கினர். அவர்கள் அக்கறையோடும், ஆர்வத்தோடும் பயின்றார்கள். அதற்கான ஊக்கத்தை அறிவழகன் அளித்திருந்ததே காரணம். இந்த வயசுக்குமேல படிச்சு என்ன பண்ணப்போறோம்? என்று கேட்டவர்கள் எல்லாம் இப்போது எழுத்துக்கூட்டி படிக்கக் கற்றுக்கொண்டார்கள்.


கைநாட்டுக் கிராமம் என்றிருந்த நிலை மாறி இப்போது கையெழுத்துப் போடும் கிராமம் என்ற பெயருக்கு மாறிவிட்டது. ஊராட்சி, ஒன்றியம், வட்டம், மாவட்டம் என்ற நிலைகளில் எந்தக் காரியத்துக்கு எந்த அதிகாரியைப் பார்க்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தனர். ஆம், அறிவழகனிடம் வாழ்க்கைத் தேவைக்கான பொது அறிவுக் கல்வியையும் கற்றதால் ஏற்பட்ட பயன் அது!

முன்பெல்லாம் அஞ்சல்காரர் வந்ந்தால் முதியோர் பென்சன் வாங்க கைநாட்டுப்போட்டுவிட்டு கொடுத்த பணத்தை வாங்கிய நிலை மாறிவிட்டது. பேருந்தில் பயணம் செய்தால் நடத்துனரிடம் உரிய சில்லறையை தருமாறு கோரிப் பெறுகின்றனர்.

அந்த ஆண்டு இறுதிக்குள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களே இல்லை என்ற இலக்கை அடைவது என்ற குறிக்கோளை அறிவழகன் கொண்டிருந்தார். அதற்காக விடுமுறை நாட்களில் கூடுதல் வகுப்புகளை நடத்தினார். அறிவழகனிடம் ஆண்கள் அணிவகுத்து நின்று எழுத்தறிவு பெற நாட்டம் கொண்டவர்களாயிருந்தனர்.

அதே நேரத்தில் அமுதா, பெண்களுக்கு பொம்மை செய்தல், கூடை பின்னுதல் போன்ற கைத்தொழில் கற்றுக்கொடுப்பதில் முனைந்திருப்பார். அந்தக்கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணும் சுய சம்பாத்தியத்தில் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பது அமுதாவின் குறிக்கோள்!


இதற்காக வாசுகி மன்றம் என்ற பெண்கள் சங்கத்தை உருவாக்கி அமுதா வழிநடத்தினார். கூட்டுறவு முறையில் இயங்கும் இந்த அமைப்பில் பெண்கள் கையினால் தயாரித்த கலைப்பொருட்களுக்கு நல்ல வரவேற்பிருந்தது. நகரத்திலிருந்து நல்ல விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.


"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை" என்ற தாரக மந்திரம் “வாசுகி” மன்றத்தின் முழக்கமாகும்! இந்த அமைப்பில் வேலை செய்யும் பெண்களுக்கு சுய வருமானத்துக்கு வழி கிடைத்தது. வருமானத்தில் ஒரு சிறுபகுதியை சேமிக்கவும் கற்றுக்கொடுத்ததால், கிராமப்பெண்கள் சேமிப்பில் ஆர்வம் காட்டினார்கள். இலாபத்தொகை வருடம்தோறும் தமிழர் திருநாளில் பிரித்துக்கொடுக்கப்பட்டது.


இதுவல்லாமல் குடும்பத்தில் ஏற்படும் திடீர் செலவுகளுக்கு வட்டி இல்லாத கடனாக பெற்றுக்கொள்ள அமுதா ஏற்பாடு செய்தது அந்தக் கிராம மக்களுக்கு எதிர்பாராத சங்கடங்களை எதிர்கொள்ள சக்தியைக் கொடுத்தது. கவலையை விரட்டியடித்தது. மகிழ்ச்சியை பொழிந்தது.

வாசுகி மன்றப் பெண்கள் பெறும் நன்மைகளைக் கண்டு பெண்கள் வாசுகி மன்றத்தை நாடிவரத் துவங்கினர். இதனால் அந்தக் கிராமத்தில் வீண் அரட்டை அடிப்போர், வம்பு பேசுவோர் என்று எவருமில்லாத உழைக்கும் கிராமமாக மாறியது. பக்கத்து கிராம பெண்கள் எங்களையும் இந்த மன்றத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். அல்லது எங்களூரிலும் இதுபோன்ற ஒரு மன்றத்தை துவக்குங்கள் என்று கேட்கத் துவங்கினர்.


அறிவழகன் ஓய்வு பெறும் நாளும் வந்தது. இல்லத்தரசியும் தன் உள்ளத்தரசியுமான அமுதாவிடம் முக்கியமான முடிவு எடுப்பது குறித்துக் கலந்தாலோசித்தார். உடனிருந்த நவீனிடமும், அகிலாவிடமும் தம் முடிவைச் சொன்னார். தங்களையும் பண்படுத்தி இந்த ஊரையும் பண்படுத்திவரும் தந்தையின் முடிவிற்கு பெரிதும் மகிழ்ந்து உடன்பட்டனர். அரசு வேலை நாளையோடு முடியப்போகிறது என்கிற நேரத்தில் அதைப்பற்றிக் கவலைகொள்ளாது குடும்பத் தலைவன் எடுத்த பொது நோக்கான முடிவில் அந்தக் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்திருந்தது.

அடுத்தநாள் பொழுது புலர்ந்தது. அகமும் புறமும் மகிழ்ச்சிப் பெருக்கில் அறிவழகன் இல்லத்தினர் வலம்வந்தனர். ஊரே ஊர்ச் சாவடியின் முன் கூடியிருந்தது. எதிரே முப்பது வருடங்களுக்கு மேல் பணியாற்றிய பள்ளி. அறிவழகன் நடுநாயகமாக அமர்ந்திருக்க கிராமப்பெரியவர்கள் சிலர் ஒருபுறமும் உடன் பணியாற்றிய ஆசிரியப் பெருமக்கள் ஒருபுறமும் சோகம் கவிந்துகிடக்க வீற்றிருந்தனர். மேடையிலிருந்தவர்கள் ஒவ்வொருவராக அறிவழகனது சேவைகளைப் புகழ்ந்து பேசி அமர்ந்தனர். அவர் இல்லாப் பள்ளியை எங்களால் கற்பனை செய்து பார்க்கவியலவில்லை என்று கண்ணீர் ததும்ப ஆசிரியர்கள் பேசினர்.


அறிவழகன் பேச எழுந்தார். மக்களோடு மக்களாக அமர்ந்திருந்த தன் இனிய குடும்பத்தை ஒரு கணம் பார்த்தார். அப்போது கிராமப் பெரியவர் மேடையேறி "துண்டு, மாலை மரியாதை என்று இதுவரை ஏற்றுக்கொள்ளாத ஆசிரியர் அறிவழகன் இன்று ஒருநாள் நாங்கள் அளிக்கும் மரியாதையை அவர் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு கைத்தறி ஆடையை அணிவித்தார். தொடர்ந்து ஒரு வரிசை, கையில் மாலை, துண்டு சகிதமாக எழுவதைக் கண்டதும் அறிவழகன் பேசலானார்.

உங்கள் எல்லோரின் சார்பிலும் இந்தப் பெரியவர் அளித்த ஆடையை மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறேன். தயவுசெய்து நான் சொல்லப்போவதைக் கேட்டுவிட்டு அத‌ன் பிறகு நீங்கள் துண்டு, மாலை போடுவதை வைத்துக்கொள்ளலாம். அமருங்கள் என்றார்.

ஊசிவிழுந்தால்கூட சத்தம் கேட்கும். அந்த அளவுக்கு அமைதி அடுத்த நொடியில்!

"வெள்ளப் பெருக்கைப்போல கூடியிருக்கிற உங்களைப் பார்க்கும்போது....(கண்களில் அருவியாய் நீர் வடிகிறது) நீங்கள் என் மீதும், நான் உங்கள் மீதும் வைத்திருக்கும் பாசம் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரப் பாசம் போன்றது. இந்தப்பள்ளியை விட்டுப் பிரியும் கவலை ஒருபுறமிருந்தாலும் உங்களோடு இன்னும் அதிக நேரம் செலவிடக் கிடைத்த வாய்ப்பாக அதை எண்ணி மகிழ்கிறேன்.


எழுதப்படிக்கத் தெரியாதவர்களே இல்லை என்ற இலக்கை இன்று முதல் நாம் அடைந்துவிட்டோம் என்ற‌ மிக மகிழ்வான செய்தியையும் ஒத்துழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்.
 
என் மகன், நவீன் இந்த ஆண்டு இறுதியில் மருத்துவர் பயிற்சி முடிந்து மருத்துவராக பணிபுரியப் போகிறான். அரசு மருத்துவமனையில் வேலை தயாராக இருந்தாலும், இந்தக் கிராம மக்களுக்காக சேவையாற்ற முடிவு செய்திருப்பதால் இங்கு ஒரு சிறிய மருத்துவமனை கட்ட வேண்டும். நாமே ஒரு முறை வைத்துக்கொண்டு வீட்டுவீட்டுக்கு சித்தாளாக, கொத்தனாராக இருந்து நாமே கட்டுவோம்.
 
நான் ஓய்வு பெறுவதால் கிடைக்கும் பணிக்கொடை அனைத்தையும் அந்த மருத்துவமனை கட்டுமானப்பணிகளுக்கு அளிக்கப் போகிறேன். எனக்கு மாலை, துண்டு போட விரும்புபவர்கள், மாலை துண்டுக்குப் பதிலாக‌ இந்த நல்ல காரியத்துக்கு உங்களால் இயன்ற தொகையை ஊர் நாட்டாமை நல்லதம்பியிடம் அளிக்குமாறு வேண்டுகிறேன்."என்றார். அங்கிருந்தோர் எழுப்பிய கரவொலி விண்ணை எட்டியது!

அன்பும் அறனும் உடைத்து ஆயின், இல்வாழ்க்கை



பண்பும் பயனும் அது.

Love and virtue are the flower and fruit

Of domestic life.

பொருள்: இல்வாழ்வு இருவர் கொள்ளும் அன்பு மற்றவருடன் கலந்து வாழும் அறமும் உடையதாயின், அவையே இல்லறதின் பண்பும் பயனும் ஆம்!

-ஆல்ப‌ர்ட்,விஸ்கான்சின்,அமெரிக்கா.

Sunday, October 21, 2007

குறள்கதை-(1)


மனத்தில் மாசிலா மணியே போற்றி!

 
ஆளவந்தார் அளவுக்கதிகமான
மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்.
இருக்காதா?
அவரைப் புகழ்ந்து பேசுவதற்கென்று ஒரு பெருங்கூட்டமே அங்கிருந்தது.
"அய்யா,அம்மனுக்கு நீங்கள்
இந்தமுறை செய்த சிறப்பு முற்காலத்தில் அரசர்கள் கூடச் செய்திருக்கமாட்டார்கள்" என்றார் ஒருவர்.

"பின்னே கண்ணைப்பறிக்கும் ஒட்டியாணம் அம்மனுக்கே புது மெருகல்லவா? வேறு யாருஞ் செய்ய இயலாச் சிறப்பு அய்யா," என்றார் இன்னொருவர்.

"அம்மன் கோயில் உள்ளவரை அய்யா பேர் இருக்கும்!" என்று ஒருவர். கூடியிருந்தவர்கள் புகழப்புகழ உற்சாகத்தில் மிதந்தார் ஆளவந்தார்.

ஆளவந்தார் அந்த சுத்துப்பட்டி கிராமங்கள் அறிந்த ஒரு பெருநிலக்கிழார். மாதம் மும்மாரி பொழியாவிட்டாலும் ஆழ்கிணறுகள் வற்றாது வழங்கும் தன்மை உடைத்ததாய் இருந்ததால் பரந்துவிரிந்த அவரது நஞ்செய், புஞ்செய் நிலங்கள் மகசூலை அள்ளிக்கொட்டுகிறது. குவியும் செல்வம் அவரது நிலப்பரப்பை அதிகரித்துக்கொண்டே போகிறது.

ஊரார் புகழவும், வெளியூர்காரர்கள் மெச்சவும் ஊர் கோவில்கள் திருவிழாவானாலும்
குடமுழுக்கானாலும், எந்த சுபகாரியமானாலும் ஆளவந்தார்தான். ஆளவந்தார் இல்லாமல் எந்தச் சுபகாரியமும் அரங்கேறாது. இது ஆளவந்தாரின் ஒரு முகம்!

கோவில்களுக்கும், தெய்வங்களுக்கும் பூசை செய்வது ஒரு புறம் இருந்தாலும் எச்சில் கையால் காக்கையைக்கூட விரட்டமாட்டார் என்பது இவரது இன்னொரு முகம்!

தமது நிலத்தில் வேலை பார்க்கும் தினக்கூலிகளுக்கு உரிய கூலியைக் கொடுப்பதில்லை. தம் பண்ணையில் வேலைபார்க்கும் வேலையாள் குடும்பத்திற்கு ஒரு ஆபத்து சம்பத்து என்றால்கூட உதவ மனம் வராத புண்ணியவாளர். ஒருசமயம், பண்ணையாள் ஓடிவந்து என் மனைவி பிரசவ வேதனையில் துடிக்கிறாங்க சாமி, நகரத்துல இருக்கிற மருத்துவமனைக்கு கொண்டுபோகணும்ன்னு பிரசவம் பாக்குற பொன்னாத்தா சொல்லீட்டாங்க சாமி. நீங்கதான் எப்படியாவது காப்பாத்தணும்ன்னு கேட்டார். அழுதார். புரண்டார். ஆளவந்தார், அசையவே இல்லையே!

"என் மகனை கல்லூரியில படிக்க ஆசைப்படுறாங்க. நீங்க தயவு பண்ணா புண்ணியமா இருக்கும்" ஆளவந்தாரிடம் கணக்கரா இருக்கிற கந்தசாமி கேட்டார்.

"இப்ப உம்மோட மகன் கல்லூரி போய் படிச்சி என்னத்த கிழிக்கப்போறான். பேசாம நம்ம குவாரியில கல்லொடைக்கப்போனா உமக்கு நாலுகாசாவது கெடைக்கும்," என்றாரே பார்க்கலாம்.

ஆளவந்தார் ஒரு பக்கம் பூசை, கோவில் உற்சவம், அன்னதானம் என்று வெளிப்பகட்டுக்குச் செய்து தம்மை அடையாளப்படுத்திக்கொண்டாலும் எப்போதும் நாலுபேர் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தாலும் உள்ளுக்குள் உற்சாகம் இழந்தவராகவே இருந்தார். அதற்குக் காரணம், அந்த ஊரில் உள்ள மணி என்ற மாசிலாமணி!


மணி அதே ஊரில் நிலம், நீச்சுன்னு வசதியா உள்ளவர். விளம்பரத்துக்காகவோ, பகட்டுக்காகவோ எதையும் செய்யமாட்டார். இல்லை என்று வரும் எவருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பது வழக்கம். வலது கையில் கொடுப்பது இடது கைக்குக்கூடத் தெரியாது என்பதுபோல கொடுப்பவர்.

தன் நிலத்தில் கூலி வேலை செய்பவர்கள் குடும்பத்தை தன் குடும்பம்போல் பாவித்து தேவையான உதவிகளை அவர்கள் தேவை அறிந்து செய்யும் உத்தமர்! இதனால் ஊர் மக்கள் ஆளவந்தாருக்குச் செய்யும் மரியாதையைவிட அதிகப்படியான மரியாதையைக் கொடுத்தனர். கோவில் விசேசம், தேர், திருவிழாக்களுக்கு பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்து படைபரிவாரங்களோடு வரும் தனக்குத் தரும் அதே மரியாதையைத் தனியாளாக வரும் மாசிலாமணிக்கும், செய்வது கொஞ்சமும் பிடிக்கவில்லை. இது ஆளவந்தாருக்கு உள்ளுக்குள் பொறாமையை ஏற்படுத்தியிருந்தது. இதை ஆளவந்தார் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதில்லை. மாசிலாமணியின் மரியாதையைக் குறைக்கும் வகையில் ஒரு சந்தர்ப்பம் வராதா என்று ஆளவந்தார் அவ்வப்போது எண்ணுவது உண்டு.

ஆளவந்தாருக்கு அப்படியொரு சந்தர்ப்பம் வந்தது. தொலைதூரக் கிராமத்திலிருந்து கோவில் ஒன்று கட்டுவதற்கு நிதியுதவி கோரி குழுவாக சிலர் வந்திருந்தனர். இவர்களை மாசிலாமணியிடம் அனுப்பி அவர்கள் மூலமாகத் தாம் நினைப்பதைச் சாதித்துக்கொள்ள விரும்பினார். வந்தவர்களை நல்ல முறையில் உபசரித்து பின்னர் சொன்னார்.

"நீங்கள் நண்பர் மாசிலாமணியிடம் சென்று கோவில் கட்ட நிதி கேளுங்கள். அவர் எவ்வளவு தருகிறாரோ வாங்கிவாருங்கள். அவர் தருவ‌தைவிட ஒருமடங்கு நான் அதிகமாகத் தருகிறேன்" என்றார் ஆளவந்தார்.

வந்தவர்களுக்கோ மிக்க மகிழ்ச்சி. ஒரே கல்லில் இரண்டுமாங்கனியை வீழ்த்திவிட்டதுபோல மகிழ்ந்தனர்.

நிதிகேட்டு இவர்கள் மாசிலாமணி வீட்டுக்குப் போன நேரம் அங்கு நடந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அவரிடம் ஏதும் கேட்காமலே திரும்பிவிட்டனர்.

ஆளவந்தாரிடம் திரும்பி வந்தவர்கள்," நாங்கள் போன நேரம் சரியில்லை. அவரைப் பார்க்க முடியவில்லை, நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் என்று சொல்லி சமாளித்துக் கேட்டனர்.

"இன்று எங்கள் வீட்டிலேயே தங்குங்கள். நாளை போய் பாருங்கள். அவசியம் தருவார்," என்றார் ஆளவந்தார்.


மறுநாளும் இவர்கள் போனார்கள். அப்போதும் அங்கு நடந்ததைப் பார்த்துவிட்டு கேட்டு இல்லை என்று சொல்லுவதை விட கேட்காமாலே செல்லுவது மேல் என்று திரும்ப எத்தனித்தபோது இவர்களைக் கவனித்த ஒருவர் என்ன, ஏது என்று விசாரித்தார். இவர்கள் விசயத்தைச் சொன்னார்கள். அவரோ,"நீங்க அய்யாவைப் பார்த்துக் கேளுங்க. கண்டிப்பா செய்வாருங்க" என்றார்.

"இல்லை நேத்து வந்தோம். வரவுசெலவு கணக்குல இருபது ரூபாய் கொறைஞ்சதுக்கு ஒருத்தருக்கு இன்னைக்கு ஒருநாள் சம்பளம் உனக்கில்லைன்னு சொல்லிக்கிட்டிருந்தார். இன்னைக்கு தேங்காய் விற்றுவரவு வைத்ததில் ஒரு ரூபா கூடுதலா கணக்கு எழுதுனதுக்கு ஒருவாரம் சம்பளம் இல்லைன்னு சொல்லிக்கிட்டிருந்தார்...அதான் என்றார் அதில் ஒருவர்.

அடடே, நீங்க அதை வச்சு அய்யாவை கருமின்னோ, கஞ்சரோன்னு நீங்க நினைக்க வேணாம். அய்யா கணக்கு விசயத்துல கண்டிப்பானவர்தாம். அந்த ஒரு நாள், சம்பளம், ஒருவாரச் சம்பளம் எல்லாம் அவங்க வீட்டுக்கு நேரடியாப் போயிடும். அதெல்லாம் ஒங்களுக்குப் புரியாது. நீங்க அய்யாவைப் போய் பாருங்கன்னார்," அவர்.

மனசில்லாமலே போய் பார்த்தனர். வந்த விசயத்தைச் சொன்னார்கள். அடடே, அப்படியா தூரம் தொலையில இருந்து வந்திருக்கீங்க. மொதல்ல சாப்பிடுங்க அப்புறம் பேசுவோம்ன்னார், மாசிலாமணி.

வந்தவங்க திருப்தியாச் சாப்பிட்டாங்க; கோவில் கட்ட எவ்வளவு பணம் தேவைன்னு கேட்டார்?
“கோவில் கட்ட பத்துலட்ச ரூபாய் ஆகும். உங்களால முடிஞ்சதைக் கொடுங்க. நாங்க இன்னும் சிலரைப் பார்த்து நன்கொடை வாங்கி கோவில் வேலையை முடிச்சிருவோம்,"என்றனர்.

இருங்க வர்றேன்னு உள்ள போனார். ஒரு சின்னப் பெட்டியைக் கொண்டுவந்து கொடுத்தார். இதுல பத்து இலட்சம் ரூபாய் இருக்கு. போய் கோவில் வேலையை ஆரம்பிங்கன்னார். வந்தவர்களோ வாயடைத்துத் திகைத்துப் போய்விட்டனர்.
மாசிலாமணியே பேசினார்.

"நீங்க ஒரு நல்ல காரியம் செய்யுறீங்க. நல்ல காரியத்துக்கு உதவாத‌ பணம் எங்கிட்ட இருந்து என்ன பயன்? நன்கொடை வசூல் அது இதுன்னு எல்லாம் நேரத்தைச் செலவு பண்ணாம போய் ஆகவேண்டிய காரியத்தைச் செய்யுங்க. முக்கியமா, நான் நன்கொடை கொடுத்த விசயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது," என்று சொல்லி அனுப்பி வைத்தார். நம்ப இயலா மகிழ்வோடு எல்லோரும் கிளம்பினர்.

ஆளவந்தாரிடம் சென்று நாங்க கெளம்புறோம். நன்கொடை எதுவும் வேண்டாங்க என்று புறப்பட முயன்றபோது,"எனக்குத் தெரியும் அவரு வடிகட்டுன கஞ்சர், பைசா பெயராது. இருந்தாலும் கோவில் காரியத்துக்கு எதாவது செய்வாரோன்னு அனுப்பினேன். உங்களை வெறுங்கையா நான் அனுப்ப மாட்டேன். வந்ததுக்கு ஒரு பத்தாயிரமாவது தர்றேன்.."என்றார்.

அய்யா, அதெல்லாம் வேண்டாங்க. நாங்க கெளம்புறோம். கோயில் கும்பாபிசேகத்துக்கு நீங்க அவசியம் வரணும் என்று சொல்லிப் புறப்பட்டனர்.

புதிய கோவில் கும்பாபிசேகத்துக்கு ஆளவந்தார் படைபரிவாரங்களோடு வந்திருந்தார். கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர். அப்போது வேர்க்க விறுவிறுக்க அங்கே மாசிலாமணி வந்தார். நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாய் அவரை வரவேற்கச் சென்றனர். மாலைமரியாதை பரிவட்டம் கட்ட முனைந்த போது, நமக்கு எதுக்குங்க இதெல்லாம் என்று மாசிலாமணி மறுத்து, அய்யா ஆளவந்தாருக்கு இந்தச் சிறப்பை எல்லாம் செய்யுங்க என்று அவரை நோக்கி கை காட்டினார்.


இதைக் கேட்ட ஆளவந்தாருக்கு உள்ளூர எரிச்சல் என்றாலும், நன்கொடையெல்லாம் எதுவும் குடுக்காம எப்படி இந்த மரியாதையை அவரு ஏத்துப்பாரு என்று தம் அருகிலிருந்தவரிடம் வாய்விட்டுச் சொல்லவும் செய்தார்.

அதைக்கேட்ட அந்த ஊர்க்காரர் சொன்னார். "அய்யா, இந்தக் கோயிலையே கட்டிக்கொடுத்த அந்தமகராசரையா எதுவும் குடுக்காதவர்ன்னு சொல்றீங்க.."என்றார்.

விசயம் தெரிந்தபின், இவ்வளவு நாளும் நல்ல மனிதர் ஒருவரை தவறாக எடைபோட்டதோடு, தம்முடைய ஆரவாரமான பகட்டு நடவடிக்கைகளை எண்ணி வெட்கப்பட்டார். மனதில் தூய எண்ணங்களோடு ஆரவாரமின்றி அடக்கமாய் இருக்கும் மாசிலாமணி மீது பொறாமை கொண்டோமே என்று ஆளவந்தார் வெட்கப்பட்டு தம் செயலுக்கு தலை குனிந்து, "நான் இந்த மாலை மரியாதைக்கு கொஞ்சமும் தகுதியற்றவன் என்று வாங்க மறுத்தார்.

தானே முன்னின்று மாசிலாமணிக்கு மாலை மரியாதை பரிவட்டம் கட்டச் செய்தார்.
இதைப்பார்த்த ஆளவந்தாரின் நண்பர்கள்,"இப்பத்தான் அய்யா மாசுமறுவற்றவரையும் கண்டுகொண்டார்; தாமும் மாசற்றவராயினார்," என்றனர்.

"மனத்துக்கண் மாசு இலன் ஆதல்; அனைத்து அறன்;
ஆகுல நீர பிற" (குறள் 34)

A spotless mind is virtue’s sum
All else is empty noise

பொருள்:
மனத்தில் மாசிருந்தால் வெளியில் பேசுவன செய்வன எல்லாம் நடிப்பாகிவிடும். அவைதம்மை அறநெறியாளராகக் காட்டிக்கொள்ள என்று செய்யப்படுவன;அதனால் வெளிப்பாடென்ற ஒரே ஆரவாரத்தன்மை ஒன்றே உடையன, அதனினும் மனத்துக்கண் மாசின்றி இருத்தலே அடிப்படை அறமாகும். அனைத்து அறன் என்றது, மாசு நீக்கமே அதனளவில் முழுமையான அறமாகிவிடும் என்றுணர்த்துகிறது. மாசு இருப்பின், பிற யாவும் அறமாகாமையின், அதனை நீக்குதலே'அனைத்து அறனும்' ஆகும்.
--ஆல்ப‌ர்ட்,விஸ்கான்சின்,அமெரிக்கா.